Saturday, January 28, 2006

தமிழ்மண நிர்வாகிகளின் புதிய அறிவிப்பு

தமிழ்மண நிர்வாகியிடமிருந்து வந்த புதிய மடலில் மட்டுறுத்தலை ஏதுவாக்கினால் மட்டுமே பட்டியலில் தொடர இயலும் என்று ஓர் 'அன்பான' மடல் ஒன்று வந்திருந்தது. எனது முந்தைய பதிவிலே கூட ஒரு விசிட்டர் தரம் தாழ்ந்த பின்னூட்டம் ஒன்றை அளித்திருந்தார். அவருக்கு பதிலையும் இட்டிருந்தேன். வலைப்பதிவில் இடுகைகள் இடுவதில் புதியவனாயிருப்பினும் நிகழ்வுகளைக் கவனித்தேதான் வந்திருக்கிறேன். சரி இப்போது ஒரு சிறு அலசல் செய்வோமா? முதலில் இவ்வகைத் தாக்குதலுக்கு உள்ளானவர் பலர், அவரவர் கருத்துக்கு உட்படாதோர் தரப்பிலிருந்து இது சிறுபிள்ளைத் தனமான தாகுதலாக முதலில் தோன்றியது. பின்னர் ஒரு குறிப்பிட்ட பதிவரை மட்டும் குறி வைத்து இவ்வகைப் போலிப் பின்னூட்டத் தாக்குதல்கள் தொடர்ந்தன. அவரும் ஏதோ ஒரு fetish-க்காக இதனைக் குறை சொல்வது போல எதிராகப் பின்னூட்டமிடும் நபரை சீண்டுவது போல பல்வகை முயற்சிகளும் மேற்கொண்டார். சரி, இதில் தமிழ்மண நிர்வாகிகள் என்ன குற்றமிழைத்தார்கள்? அவர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டிய அவசியம் எதிராகப் பின்னூட்ட மேற்படி போலி நபருக்கு அவசியம் இல்லை என்று தான் இத் தாக்குதலின் மூல காரணத்தை அறிந்தவர் எண்ணுவர். காசி என்கிறத் தனி நபரை மட்டும் குறி வைக்காது தமிழ்மண நிர்வாகி குழுவையே குறி வைத்து தூஷணங்கள் இடுவதைப் பார்த்தால், நிர்வாகக் குழுவை மட்டுறுத்தலைக் கட்டாயப் படுத்தும் மடல் அனுப்பும் நிலைக்குத் தள்ளப் பட இவ்வகை முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டனவோ என ஐயம் எழுவதையும் தடுக்க முடியவில்லை. என் பதிவிற்கு இவ்வகை மட்டுறுத்தலை நான் என்று தூஷணப் பின்னூட்டம் பார்த்தேனோ அன்றே ஏற்படுத்திவிட்டேன். எது எப்படியோ போலிப் பின்னூட்டமிடும் நபர் யாராயினும், (யாரரென்று தெரியும் எனப் பலரும் சொல்கிறார்கள்) அவர் இம்மாதிரி முயற்சிகளைக் கைவிட வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

Thursday, January 26, 2006

ஒரு ஜோக்

நபர் 1: கல்யாண வீட்டிலே திருடிட்டு எப்படித் தப்பிக்கறது?
நபர் 2: திருடன் திருடன்னு கத்திக்கிட்டு எல்லாருக்கும் முன்னாடி ஓட வேண்டியது தான்..


டிஸ்கிளைமர்: உள்குத்து வெளிக்குத்து என்று நீங்கள் ஊகித்துக் கொண்டால் நான் பொறுப்பாக மாட்டேன்..

Sunday, January 22, 2006

யார் குற்றம்?

ஓர் அலுவலகத்தில் நான்கு பேர் இருந்தனர்.

அவர்கள் பெயர்கள் முறையே
1). யாராகிலும் 2). சிலபேர்3).ஒவ்வொருவரும் 4). எவருமே.

ஒரு முக்கியமான வேலை செய்ய வேண்டியதிருந்தது.
'யாராகிலும்' செய்வார் என்று 'ஒவ்வொருவரும்' நினைத்தார்.
'எவருமே' செய்யாமல் இருக்கக்கூடும் என்று 'யாராகிலும்' நினைக்கவில்லை.

கடைசியில் அந்த வேலை செய்யப்படாமலே போக
'ஒவ்வொருவரும்' 'சிலபேரை' குறை சொல்ல உண்மையில் குறைசொல்லப்படவேண்டியவர் 'எவருமே' இல்லை.

நீங்கள் சொல்லுங்கள் யாரைக் குற்றம் சொல்வது?

ஒரு சிறிய கணித வித்தை:

ஓர் ஏழு இலக்க எண்ணை நினைத்துக் கொள்ளுங்கள் (உங்கள் தொலை பேசி எண்ணாகக் கூட இருக்கலாம், மனக் கணக்கில் நீங்கள் புலி என்றால் கால்குலேட்டர் தேவையில்லை)

1. முதல் மூன்று எண்களை 80 ஆல் பெருக்குங்கள்
2. விடையுடன் 1 ஐக் கூட்டுங்கள்
3. பிறகு வரும் எண்ணை 250 ஆல் பெருக்குங்கள்
4. தற்போதுள்ள விடையுடன் இறுதி நான்கு எண்களை இருமுறைக் கூட்டுங்கள்
5. வரும் விடையிலிருந்து 250 ஐக் கழியுங்கள்
6. தற்போது இருக்கும் எண்ணை 2 ஆல் வகுங்கள்

தற்போது கிடைத்திருக்கும் எண் என்னவெனத் தெரிகிறதா?

Saturday, January 21, 2006

1981-க்கும் 2005-க்கும் என்ன ஒற்றுமை?

மின்னஞ்சலில் வந்த ஒரு நகைச்சுவை (!)

ஆண்டு: 1981

1. இளவரசர் சார்லஸ் திருமணம்
2.லிவர்பூல் ஐரோப்பியக் கால்பந்து சாம்பியன் வெற்றி
3. ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா இழந்தது
4. பாப்பரசர் மரணம்

ஆண்டு: 2005

1. இளவரசர் சார்லஸ் திரு(மறு) மணம்
2.லிவர்பூல் ஐரோப்பியக் கால்பந்து சாம்பியன் வெற்றி
3. ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா இழந்தது
4. பாப்பரசர் மரணம்

இதன் மூலம் தெரிவது என்னவென்றால், இனி இளவரசர் சார்லஸ் திருமணம் செய்ய எண்ணினால்.................. (கோடிட்ட இடத்தை நிரப்புக)

அன்பு என்றொரு மூலிகை - இறுதிப் பகுதி

இத்தனை நாளாய் இல்லாமல் திடீரென்று வந்த தலைவலி ராதா அம்மையாருக்கு ஆச்சரியமாக இருந்தது. அதைவிட ஆச்சரியம் மருமகளின் திடீர் கரிசனம். இதுப்போல் கரிசனம் காட்டுவாளென்றால் தினம் தினம் தலைவலி வந்தால் கூட தாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்தார்.

தினமும் மூலிகை மருந்தை கவிதா தன் மாமியாருக்கு புகட்டி வந்தாலும் அது நச்சு என்று நினைக்கும் போதெல்லாம் அவளுக்கு குற்ற உணர்வு மனதை உறுத்தவே செய்தது. மாமியாருக்கு முதுமையின் காரணமாக தள்ளாமை ஏற்பட்டாலும் 'தான்' தான் காரணமோ என்று உள்ளுக்குள் பதைத்துப்போனாள்.

அதை விட மாமியாரிடமிருந்து திரும்பப் பெறும் அன்பும் அவளைத் திக்குமுக்காட்டியது.ஒரு முறை மனம் விட்டு பேசிக்கொண்டிருந்தப் போது கேட்டே விட்டாள்:"அத்தை, தப்பா நினைக்கலேன்னா சொல்லுங்க, எனக்கு குழந்தை இன்னும் பிறக்கலையேன்னு உங்களுக்கு வருத்தமில்லையா....? என் பேர்ல உங்களுக்கு கோவம் வரல்லியா.....?

"அடி அசடே, இப்பவாச்சும் மனசு விட்டு கேட்டுட்டியே, தான் பேரப்பிள்ளகள எடுத்துக்கொஞ்சணும்னு எந்த அம்மாவுக்குத்தான் ஆசையிருக்காது. அந்த விஷயத்துல வருத்தமில்லேன்னு சொல்ல மாட்டேன்.ஆனா அதுக்கு நீ என்னம்மா செய்வாய்? கடவுளுக்கு எப்ப கொடுக்கணும்னு தோணுதோ அப்ப கொடுக்கட்டும். இதுக்காகவெல்லாம் கோபப்பட முடியுமா? பேரப்பிள்ளைகள் இல்லாவிட்டாலும் ஒரு 'மகள்' போல நீ என்னை கவனிச்சுக்கறத நினைத்தால் மகள் இல்லாத குறையை இத்தனை நாளுக்கு அப்புறம் கடவுள் போக்கிட்டான்னு நெனச்சுக்கறேனம்மா.." என்றார் மாமியார்.

கவிதா உள்ளுக்குள் உடைந்துப் போனாள். இப்படி ஒரு 'அம்மா' இருக்கும் போது தான் மகள் போல நடந்துக்கொள்ளவில்லையே என்று மருகினாள். உளப்பூர்வமாக உருகினாள். குற்ற உணர்வு அதிகரித்து தூக்கம் வராமல் தவித்தாள். என்ன ஏது என்று கேட்ட மோகனுக்கும் சரிவர பதிலளிக்க இயலாமல் திணறினாள். காலை முதல் வேலையாக அந்த மூலிகைச்சித்தரைச் சந்தித்து 'நச்சு முறிவு' மூலிகை வாங்கி வர வேண்டும் என்று தீர்மானித்தாள்.

மூலிகைச்சித்தர் வழக்கமான தன் புன்முறுவலுடன் கவிதாவை எதிர்கொண்டார்

"வாம்மா! என்ன நீ மட்டும் வந்திருக்கே..." கவிதா உடைந்துப்போனாள். கண்ணீருடன் தன் மடத்தனத்தை சாடினாள். உடனடியாக நச்சுமுறிவுக்கு மருந்து தரும்படி கெஞ்சினாள்.

"அவசியமில்லேம்மா! நான் கொடுத்தது 'நச்சு' ஒண்ணுமில்லே. உன் பிரசினை என்னன்னு புரிஞ்சிக்கிட்டு 'நீ அன்பாக நடந்துக்கணும்னு தான் அப்படி ஒரு மூலிகையைத்தந்தேன்" ஆச்சரியம் விலகாமல் பார்த்தவளிடம் சொன்னார்: " அந்த மூலிகை அருந்தியவங்களை விடவும் புகட்டுகிறவங்களுக்கு அதிக பலன் தருமம்மா, ஏன்னா அதும் பேரு 'அன்பு'.


குறிப்பு: இந்தக் கதை என் நண்பர் ஒருவரின் துணையுடன் எழுதப் பட்டது. அவரின் அனுமதியுடனேயே இதனைப் பதிகிறேன். நன்றி..

அன்பு என்றொரு மூலிகை -2

"நீ ஏன் டைவோர்ஸ் பண்ணக்கூடாது?" என்றாள் பாரீஸிலிருந்து வந்திருந்த சங்கீதா, சுமதியின் அக்காள்.

"ஐயோ, அக்கா, என்ன சொல்றே நீ? எனக்கும் மோகனுக்கும் எந்தப்பிரச்னையுமில்லை, மோகனை இழக்கவும் நான் தயாரில்லே..." என்றாள் கவிதா. " இதென்ன பிரான்ஸுன்னு நெனச்சுட்டியா.."

"பிரசினையை நாம் தீர்த்துடனும், இல்லேன்னா பிரசினை நம்மளை தீர்த்துடும்" என்ற சங்கீதா அடுத்து சொன்னதைக்கேட்டு கவிதா அதிர்ந்துத் தான் போனாள்.

வெளியூரிலிருந்து வந்திருந்த ஒரு மூலிகைச் சித்தர் தனக்கு நன்கு தெரிந்தவர் என்றும் அவரைச் சந்தித்துத் தம் ஆலோசனையைச் செயல் படுத்தலாம் என்றும் சங்கீதா சொன்னாள்.

"பிரச்சனை ஏதும் வந்து விடாதே" என்று அரை மனதுடன் சித்தரைச் சந்திக்க கவிதா புறப்பட்டாள்.

மூலிகைச் சித்தர் புன்முறுவலித்து "ஒரு உயிரைக் காப்பத்தறதுக்குத்தாம்மா இது வரை மூலிகை கொடுத்திருக்கேன். முதல் தடவையா ஒரு உயிரைக் கொல்றதுக்காக மூலிகை கேக்கறவங்கள பார்க்கிறேன்"

" ஆங்.. வந்து, என்னோட பிரச்னையை முழுசா சொல்லிட்டேன் அய்யா, நீங்கள் தான் புரிஞ்சுக்கணும்" என்றாள் கவிதா, சிறு நடுக்கத்துடன்.

மூலிகைச் சித்தர் சற்று நேரம் யோசித்தார்-கண்களை மூடிக்கொண்டார்-மனதிற்குள்ளாக ஏதேதோ பேசியவர் பின் தன் கண் திறந்து கவிதாவைப் பார்த்து சினேகமாகச் சிரித்தார்

" சரி, ஒரு மெதுவாக வினையாற்றுகிற ஒரு மூலிகையை உனக்குத்தருகிறேன். காலப்போக்கில் தான் அது தன் வேலையைக்காட்டும். 'மருந்து' என்று சொல்லி அதை உன் மாமியாருக்கு கொடுத்து வா. ஆனால் உன் மீது பிறகு பழி வராமலிருப்பது முக்கியம். அதனால், மாமியாரிடம் அன்பாக இருப்பது போல் நீ கடைசிவரை நடித்து வர வேண்டும், உன்னால் முடியுமா...?"

'எ(த்)தை தின்றால் பித்தம் தெளியும்?' என்ற மனநிலையில் கவிதா சொன்னாள்: 'அது ஒண்ணும் பிரசினையில்லை அய்யா"
"அப்ப சரி.."

உற்சாகமாக வீட்டுக்கு வந்த கவிதா, தன் மாமியார் இருக்கிறாரா என்று ஓரக்கண்ணால் வீட்டைத் துழாவினாள். காணவில்லை. சமயலறைப் பக்கம் மெதுவாக வந்தவளுக்கு பின்னறையிலிருந்து மாமியார் முனகிகொண்டிருக்கும் சத்தம் கேட்டது.

'அன்பு காட்டுவது போல் நடி' - மூலிகைச் சித்தர் நினைவுக்கு வந்தார். கூடவே மூலிகையும் தான்.

"ஐயோ அத்தை, என்ன செய்யறது உங்களுக்கு..." தன் குரல் தனக்கே கேட்காத தொனியில் கேட்டுக்கொண்டு உள் நுழைந்தவள் மாமியாரின் நெற்றியில் கை வைத்துப் பார்க்க அனலாய் கொதித்தது.

மாமியாரால் தன் கண்ணையே நம்ப முடியவில்லை."வாடி..ம்மா வா, இப்பத்தான் வறியா.." என்றவர் சகித்துக்கொண்டு சொன்னார் " ஒம்வேலையப்பாரு, நான் எக்கேடு கெட்டாலென்ன..."

"அய்யோ அத்தை, உங்க கோபத்தையெல்லாம் அப்புறம் காட்டுங்க..... உடம்பு சரியில்லாத நேரத்தில கண்டதையும் யோசிக்காம மருந்து குடிங்க"தன் நடிப்பை தானே மெச்சிக்கொண்டு ' மூலிகை மருந்தை' கலந்து வந்த கவிதா மாமியாருக்கு மெதுவாக புகட்டலானாள். (தொடரும்...)

அன்பு என்றொரு மூலிகை - 1

"என்னங்க, நீங்க ஆஃபிஸ் போகும் போது என்னை சுமதி வீட்டுல விட்டுட்டுப் போறீங்களா.." என்றாள் கவிதா, கணவனின் கழுத்து 'டை'யை சரி செய்துவிட்டுக்கொண்டே.

"என்னது, சுமதி வீட்டுக்கா..? அம்மா மட்டும் இங்கே தனியாய் இருப்பாங்களே.." என்றான் மோகன் 'மதிய உணவை' கையிலெடுத்தவாறே.

"அதாங்க பிரசினையே, அவங்க ஒண்ணு பேச, நான் ஒண்ணு பேச - அவாய்ட் பண்ணனும்னு தாங்க நான் போறேன்''

"இதோ பார், இது பிரச்னையை இன்னும் அதிகமாக்காமல் இருந்தால் சரி, ஒருத்தருக்கொருத்தர் அனுசரிச்சு போறது தான் நல்லது.எத்தனை நாளைக்குத்தான் இப்படி அவாய்ட் பண்ணிட்டிருப்பீங்க ரெண்டு பேரும்."
பேசிக்கொண்டிருக்கும் போதே, அம்மா ஹாலுக்குள் வந்துவிட, அவசரமாக பேச்சை மாற்றுகிறான்"சுமதியோட அக்கா வெளிநாட்டுலருந்து வந்திருக்கா, பார்க்கப்போகணும்னு தானே சொல்றே, அதை நீயே அம்மாக்கிட்ட சொல்லிட்டு போக வேண்டியது தானே.."

"என்னப்பா மோகன்" - அம்மா

"ஒண்ணுமில்லம்மா, இவளோட கிளாஸ் மேட் சுமதி இருக்காளே, அவளோட அக்கா வெளிநாட்டுலருந்து வந்திருக்காளில்லியா, அவளைப் பார்க்க போகணும்னு சொல்லிட்டிருக்கா"

"அதுக்கென்ன, தாராளமாகப் போகட்டும், இங்க எல்லாம் என்னைக் கேட்டுத்தான் நடக்குதா, என்ன?"

அம்மாவின் இந்த வார்த்தைகளே போதும் என்பது போல, கணவன் மனைவி இருவருமாக வெளியே புறப்பட்டு மோகன் தன் இரு சக்கர வாகனத்தை 'ஸ்டார்ட்' செய்து துவங்க ...கவிதா பின்னிருக்கையில் தொற்றிக்கொள்கிறாள்.

கவிதாவுக்கு மாமியார் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவே பிடிப்பதில்லை. கல்யாணம் ஆன புதிதில் இப்படியில்லை.ஒருவருக்கொருவர் அனுசரணையாகத்தான் இருந்தார்கள். ஆனால் படிப்படியாகத் தான் 'நின்றால் குற்றம்; உட்கார்ந்தால் குற்றம்' என்று மாமியார் குற்றம் பிடிக்கத் தொடங்கி விட்டதாக உணர்ந்தாள்.

மோகன் அன்பானவன் தான். ஆனால் அலட்சியமானவன். அவனிடம் சொல்வது பலனில்லாதது. "இதெல்லாம் 'ஜெனெரேஷன் கேப்' தான். ஒருத்தரோட அருமையை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டா இதெல்லாம் ஒரு ப்ராப்ளமேயில்ல" என்பான். இருக்கலாம். ஆனால் இந்த மாமியார் கிழவிக்கு தன்னுடைய அருமையை எப்படி புரிய வைப்பது என்று தான் கவிதாவுக்கு விளங்கவில்லை.

கல்யாணம் ஆகி நாலு வருடமாகியும் இன்னும் குழந்தை பேறில்லாததும் இவளுக்கு எதிரானதாக அமைந்து விட்டது. எதிர்வீட்டு ராஜி பாட்டி தான் வரும்போதெல்லாம் மாமியார் கிழவியை உசுப்பிவிடுகிறாள். "ஏண்டி, ராதா, உன் மருமக இன்னும் ஒரு சேதியும் சொல்லலியா.....?"சுமதியிடம் ஆலோசனை கேட்கலாம் என்றால்...ஏதாவது உளறுவாள்: "சிம்பிள், நீ ஏன் தனிக்குடித்தனம் போகக் கூடாது..?" சான்சேயில்லை, இந்த எண்ணம் மோகனுக்குத் தெரிந்தால் அவ்வளவு தான், இந்த மாதிரி எண்ணமெல்லாம் வைத்திருந்தால் உன் வழியைப் பார்த்துக்கொண்டு போ" என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கத்தரித்து விடுவான். என்ன தான் செய்வது.. - கவிதா மனதிற்குள் குழம்பிக்கொண்டிருந்தாள்.

கல்யாணம் ஆகி நாலு வருடமாகியும் இன்னும் குழந்தை பேறில்லாததும் இவளுக்கு எதிரானதாக அமைந்து விட்டது.
எதிர்வீட்டு ராஜி பாட்டி தான் வரும்போதெல்லாம் மாமியார் கிழவியை உசுப்பிவிடுகிறாள். "ஏண்டி, ராதா, உன் மருமக இன்னும் ஒரு சேதியும் சொல்லலியா.....?"

சுமதியிடம் ஆலோசனை கேட்கலாம் என்றால்...ஏதாவது உளறுவாள்: "சிம்பிள், நீ ஏன் தனிக்குடித்தனம் போகக் கூடாது..?"
சான்சேயில்லை, இந்த எண்ணம் மோகனுக்குத் தெரிந்தால் அவ்வளவு தான், இந்த மாதிரி எண்ணமெல்லாம் வைத்திருந்தால் உன் வழியைப் பார்த்துக்கொண்டு போ" என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கத்தரித்து விடுவான். என்ன தான் செய்வது.. - கவிதா மனதிற்குள் குழம்பிக்கொண்டிருந்தாள். (தொடரும்...)

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet:
4